தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் ‘சிறார் திரைப்பட விழா’ என்கிற பெயரில் ஒவ்வொரு மாதமும் குழந்தைகளுக்கான படத்தை ஒளிபரப்புகிறார்கள். இந்த வரிசையில் 2023, பிப்ரவரி மாதம் ஒளிபரப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட படம் ‘மல்லி’.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மல்லி என்கிற சிறுமி, பள்ளி விடுமுறையில் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று அங்குள்ள குளம், மான்குட்டி, பூக்கள் போன்றவற்றிடம் பேசிக் கொண்டிருப்பாள். நகரத்திலிருந்து வந்திருக்கும் வனஅலுவலரின் மகளான ‘குக்கு’ என்கிற சிறுமி, மல்லிக்குத் தோழியாகிறாள். இருவரும் காட்டுப்பகுதிக்குள் மான்குட்டிகளாக ஓடியாடி விளையாடிக் களிக்கிறார்கள்.
மல்லிக்கு இரண்டு பெரிய ஆசைகள் உண்டு. ஒன்று, வருகிற திருவிழாவிற்கு பாவாடை, தாவணி அணிய வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்று அவள் விவரிப்பதே அத்தனை அழகு. “உன்னிப்பூ நிறத்தில் ஜாக்கெட், புல் நிறத்தில் பச்சைப் பாவாடை, அதில் மானுக்கு இருப்பது போன்ற புள்ளிகள், ஆகாச நிறத்தில் நீலநிற தாவணி” என்று ஆசையாக ஆசையாக தன் கனவு உடையைப் பற்றி சொல்வாள். இரண்டாவது ஆசை, நீலக்கல். ஆம், கதை சொல்லும் பாட்டி சொல்லியிருக்கிறாள். மாயசக்தியுள்ள நீலக்கல்லைப் பற்றி. அதை மாத்திரம் எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து விட்டால் ‘வாய் பேச முடியாத’ தோழியான குக்கு பேச ஆரம்பித்து விடுவாள்.
அதற்காக மல்லி எத்தகைய சவால்களை சந்திக்கிறாள் என்பதை மையப்படுத்தி கதைக்களம் நகர்கிறது.
எந்தவொரு திறமையான நடிகருக்கும் சவால் விடும்படியாக, ஆவல், அழுகை, மகிழ்ச்சி, நிராசை, கவலை, சிரிப்பு, தனிமை என்று விதம் விதமான முகபாவங்களை, உணர்ச்சிகளை நடிப்பில் காட்டி அசத்தியிருக்கிறார். இயக்குநர் சொன்னதை சரியாகப் பின்பற்றி தேசிய விருதுக்கு முழு நியாயம் செய்திருக்கிறார். ஆம், 1999-ம் ஆண்டின் ‘சிறந்த குழந்தை நடிகருக்கான’ தேசிய விருது ஸ்வேதாவிற்கு கிடைத்தது. ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய சிறந்த திரைப்படம்’ என்கிற பிரிவிலும் இந்தப் படம் தேசிய விருதுக்குத் தேர்வானது.
இந்தப் படத்தில் சித்திரிக்கப்படும் அழகான வனப்பகுதி, மசினகுடியில் படமாக்கப்பட்டிருக்கிறது. விலங்குகளின் உடல்மொழியை காட்சிகளுக்கு ஏற்ப பொருத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். “குளத்தக்கா... உன் பேரைச் சொல்லு” என்று மல்லி கேட்டதும் அதிர்வலைகளின் மூலம் குளம் பதில் சொல்லும் ஆரம்பக் காட்சியே அத்தனை அழகு. உற்சாகம் வந்துவிட்டால், ‘ஒய ஒய ஒய ஒய ஓ...’ என்று கத்திக் கொண்டே துள்ளிக் குதித்து ஓடுவது மல்லியின் பழக்கம். இதை எதிரொலிப்பது போல் படம் பூராவும் ஒலிக்கும் ஆங்காரமான சத்தம் ரசிக்க வைக்கிறது.
0 Comments