Showing posts with label Motivational stories. Show all posts
Showing posts with label Motivational stories. Show all posts

Sunday, 15 October 2023

MOTIVATIONAL STORY-9 தலைவனுக்குரிய தகுதி



ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார்.

ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார்.

அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன.

அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா?" என்று கேட்டார்.

"அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் "சரி" என்று சொல்லி சென்றுவிட்டார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான்.

மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார்.

இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார்.

அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான்.

அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார்.

"அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்?” என்று என்றார்.

"அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர்.

"புரியவில்லை” என்றார் அரசர்.

"எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ, அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான்.

அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்.

மனதை கவர்ந்தது.


தன்னம்பிக்கை கதை-8 சிங்க ராஜா


ஒரு காட்டில சிங்கம் இருந்துச்சு. அது ஏப்பம் விட்டுச்சு. பக்கத்தில இருந்த யானை. "பேட் ஸ்மல்(கெட்ட நாற்றம்)" என்று சொல்லி முகம் சுளித்தது. சிங்கத்திற்கு கோபம் வந்து "நான் ராஜா நான் ஏப்பம் விடும் போது வாய் நாற்றம் அடிக்கிறது என்று முகம் சுளிக்கிறாய்? யூ ஆர் டிஸ்மிஸ்"என்று யானையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது.

அடுத்ததாக கரடியிடம் சிங்கம் கேட்டது. "என் வாய் நாற்றம் அடிக்கிறதா என்று? அதற்கு கரடி ராஜா "உங்கள் வாயிலிருந்து ஏலக்காய், கிராம்பு, சந்தனம், ஜவ்வாது என்று விதவிதமாக வாசமாக இருக்கிறது" என்று சொன்னது. அதற்கு சிங்கம் "எப்போதும் மாமிசமே சாப்பிடுகிற என் வாய் எப்படி நறுமணத்துடன் இருக்க முடியும? நீ ஜால்ரா அடித்து பொய் சொல்கிறாய்? யூ ஆர் டிஸ்மிஸ்" கரடியையும் பதவி நீக்கம் செய்தது.

இப்போது சிங்கம் மனம் பொறுக்க முடியாமல் நரியிடம் கேட்டது அதே கேள்வியை. அதற்கு நரி சொன்னது" ராஜா நான்கு நாட்களாக எனக்கு ஜலதோஷம். எனக்கு ஒன்றுமே தெரியவில்லை" என்றது. "யு கன்டின்யூ" என்று நரியின் பதவியை நீடித்தது.

கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்வது.

முதலாளிலாகளிடமோ, பணக்காரர்களிடமோ, தான் தான் அறிவாளி என்பவர்களிடமோ, பட்டும் படாமலும், விட்டு விலகாமலும், பக்குவமாக நாம் பேசவேண்டும்!!😃😃😃

தன்னம்பிக்கை கதைகள்-7




ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார். 

அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது. 

முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார். 

அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச் செல்லுமாறு அவரை அவசரப் படுத்தினர். 

குளித்து முடித்து விட்டு வெளியே வந்த முல்லா வேலைக்காரர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒரு தங்கக் காசை அன்பளிப்பாகக் கொடுத்தார். 

அதைக் கண்டு வேலைக்காரர்கள் பிரமித்துப் போய்விட்டனர். இவர் பெரிய செல்வந்தர் என்பதை முன்னதாகத் தெரிந்த கொள்ளமால் போய் விட்டோமே. இவரை நன்கு கவனித்து உபசாரம் செய்திருந்தால். இன்னும் நிறைய தங்கக் காசுகள் கொடுத்திருப்பாரே என்று நினைத்தனர். 

இரண்டு நாட்கள் கழித்து முல்லா மறுபடியும் அந்தக் குளியல் அறைக்குக் குளிக்கச் சென்றார். 

வேலைக்காரர்கள் முல்லாவை அடையாளம் கண்ட கொண்டனர். 

உடனே அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முல்லாவுக்கு ராஜ உபசாரம் செய்தனர். 

உடலில் தேய்த்துக் கொள்ள நறுமணப் பொடிகள் தந்தனர். வாசனைப் பன்னீர் கொடுத்தனர். 

அவர்கள் முல்லாவை சூழ்ந்து கொண்டு அவர் உடம்பை அழுக்குப் போகத் தேய்த்து நிராடச் செய்தனர். 

உயர்தரமான துவாலையை உடல் துவட்டக் கொடுத்தனர். 

பிறகு அவர் உடலில் வாசனை திரவியங்களைப் பூசினர். 

அன்று முல்லா தங்களுக்கு ஆளுக்கு ஐந்தைந்து பொற்காசுகளாவது அன்பளிப்பாக் கொடுப்பார் என்று எதிர்பார்த்தனர். 

முல்லா ஆளுக்கு ஒரு செப்புக் காசுதான் கொடுத்தார். 

வேலைக்காரர்கள் மிகவும் ஏமாற்றமடைந்து இவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்கு உபசாரம் செய்ததற்கு இந்தச் செப்புக்காசுதானா பரிசு ? என்று கேட்டனர். 

முல்லா உடனே அன்றைய தினம் நான் உங்களுக்கு அளித்த பொற்காசு இன்று நீங்கள் செய்த உபசாரத்திற்கான பரிசு. இன்று கொடுப்பதோ அன்று நீங்கள் என்னை அலட்சியப்படுத்தியமைக்காகக் கொடுத்த பரிசு என்று கூறியவாறே குளியலறையை விட்டு வெளியே நடந்தார்.

Wednesday, 2 November 2022

தன்னம்பிக்கை கதைகள்-5



                                *சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை.*




``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.

இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.  

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம்  வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. 

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். 

அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;  

இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.

புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.  

நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.  

அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்...  

`மகனே நினைவில் வைத்துக் கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.  

முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ` 

மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.  

நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... 

மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. 

ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’ 

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.  

வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்...  

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.

 அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’ 

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்...’

Sunday, 16 October 2022

தன்னம்பிக்கை கதைகள்-4

                     "கழுதையுடன் வாக்குவாதம் செய்யாதே"




கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம்!"  என்று கூறியது.

புலி கோபமடைந்து,"இல்லை, புல் பச்சை!"  என்று கூறியது.

விவாதம் சூடுபிடித்தது, 

இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர், 

எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.

சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, 

"அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?"  என்று கேட்டது.

சிங்கம், "உண்மை, புல் நீலநிறமானது" என்று பதிலளித்தது.  

கழுதை விரைந்து தொடர்ந்தது, 

"புலி என்னுடன் உடன்படவில்லை••• முரண்படுகிறது•• அரசே•••!
என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டியுங்கள்."  என்று கூறியது.

அப்போது அரசர், "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு யாருடனும்  பேசக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும்••• 
இதுதான் உனக்குரிய தண்டனை" என்று அறிவித்தது.

 கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, 

"புல் நீலநிறமானது!"  , "புல் நீலநிறமானது!"  

என்று கூறிக்கொண்டு அங்கிருந்து அகன்றது. 

புலி அதனது தண்டனையை ஏற்றுக்கொண்டது, 

ஆனால் அது சிங்கத்திடம் 

"அரசே, ஏன் என்னைத் தண்டித்தீர்கள்? 
புல் பச்சை நிறம்தானே."  என்றது.

சிங்கம்:   "நீ சொல்வது சரிதான் - புல் பச்சைநிறம்தான்."  

புலி:    "அப்படியானால் ஏன் 
என்னைத் தண்டித்தீர்கள்?".

 சிங்கம் பதிலளித்தது,

 "புல் நீலமா அல்லது பச்சை நிறமா என்ற கேள்விக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான 
ஓர் உயிரினம் ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கினாய்? 
அதுவே எனக்கு கவலையை உண்டாக்கியது. அதற்கே இந்தத் தண்டனை!”

முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும். 

அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள், 

ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது பேச்சு வாதங்களில் வெற்றி மட்டுமே.  

அர்த்தமில்லாத வாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள் ... 

நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை வழங்கினாலும் அவர்கள் புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்கள். 

அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும் கண்மூடித்தனமாகத்தான் இருப்பார்கள்.  

அவர்கள் பிழையாக இருந்தாலும் அவர்களுக்கு தம்மை சரியாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும்.

அறியாமை அலறும் போது, ​​நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும்.  

"உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை."
                                                         நன்றி.

Wednesday, 12 October 2022

தனனம்பிக்கை கதைகள்-2 (எடிசன்)

                                          உலகை மாற்றிய எடிசன்


இந்த உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் வந்தாலும் எடிசனுக்கு தனி இடம் உண்டு, அவனின் அறிவும் சிந்தனையும் அதைவிட முக்கியமாய் மானிடம் பயனுற ஏதாவது செய்தாக வேண்டும் எனும் பெரும் விருப்பமும் அவரிடம் இருந்தது.

அவர் அளவு சோதனையினை சந்தித்தவனுமில்லை, அவர் அளவு சாதித்தவருமில்லை. அப்படிபட்ட வாழ்வு அவருடையது

சிறுவயதில் நோயாளி, பள்ளி செல்லவே 8 வயது ஆனது. அங்கு சென்றாலும் காது கேட்காது, கூடவே படிப்பில் மந்தம் ஆனால் ஏகபட்ட கேள்விகள் எழுப்பினார், பூராவும் படிப்பிற்கு சம்பந்தமில்லா விஷயம்

ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், அவருக்கு வாசிக்க கற்றுகொடுத்தார், அப்பா மரவியாபாரி கணக்கு பார்க்க கற்றுகொடுத்தார் இவ்வளவுதான் படிப்பு.

அவர் வாசித்ததெல்லாம் நியூட்டனும், பாரடேயும்.

ஆயினும் பிழைக்க வேண்டுமே ரயில் நினையத்தில் தந்தி அடிக்கும் வேலைக்கு சென்றார், அங்கும் ஆய்வு செய்கின்றேன் என எதனையோ அமிலத்தை கொட்டிவிட அந்த வேலையும் போனது

பின் அதேரயில் நிலையத்தில் நொறுக்கு தீனி விற்றார்

அதன் பின் காய்கறி விற்றார், பன்றி வெட்டினார், சலூன் கூட நடத்தினார் என்கின்றார்கள். அந்த எடிசன் பிற்காலத்தில் உலகை மாற்றுவான் என யாரும் நம்பி இருக்கமாட்டார்கள்.

படிப்பு இல்லா முட்டாள், கற்பனையில் சுற்றும் அரைகிறுக்கன் எனும் ஒரு பெயரோடுதான் அவர் வலம் வந்தார்

பல வேலைகளை செய்த எடிசன் பின்பு பங்கு சந்தை அலுவலகத்தில் வந்தபொழுதுதான் அவர் வாழ்க்கை மாறியது, பங்கு தகவல்களை அனுப்பும் தந்தி முறையில் வேலைக்கு சேர்ந்தார்

ஏன் என்றால் காது கேட்காதவன் நிலைக்கு அதுதான் சரி, தந்தி புள்ளிகளாக வரும், கோடுகளாக வரும் அதை வைத்து சிலவற்றை எழுத வேண்டும், இதற்கு காது கேட்கும் அவசியமில்லை

அவரின் பலவீனமே அவருக்கு பலமாயிற்று, செவிடன் என்பதால்  அப்பணி எளிதாக கிடைத்தது, அதில் இருந்த எடிசன் அதன் சிக்கல்களை கண்டு எளிதாக்க எண்ணிணான்

எடிசன் எனும் விஞ்ஞானி இங்குதான் உருவானான், கோடுகளாக வரும் தந்தியினை அதுவரை மனிதன் மொழிபெயர்க்க வேண்டும், எடிசன் அந்த கோடுகளை எந்திரமே எழுதினால் என்ன என யோசித்தார், அதை செயல்படுத்த முனைந்தார்

அதுவரை ஒற்றை வழியாக இருந்த தந்திமுறையினை இருவழியாக்கினார், ஒற்றை வழி என்றால் தந்தி அனுப்பவும் திரும்ப பெறவும் ஒரே வழிதான் கிட்டதட்ட ஒன்வே. ஆனால் இருவழி சாலை அமைத்தது போல வழிசெய்தார் எடிசன்

இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு உருவாக்கியதுதான் கிராம்போன் எனும் கருவி, இன்றைய நவீன கருவிகளுக்கும் தொலைதொடர்பு சாதனங்களுக்கும் முன்னோடி

ஆய்வு என்பது அபின் போன்றது, மிகபெரும் போதை அது உள்ளே இழுத்துவிட்டால் விடாது, எடிசனும் தொடர்ந்து கருவிகளை உருவாக்கி கொண்டே இருந்தார்

அதில் மாபெரும் வெற்றிதான் மின்விளக்கு, பாரடேயினை விரும்பி வாசித்த எடிசன் அந்த மின்சக்தியினை ஓளியாக மாற்றலாம் என நம்பினார், கடும் ஆய்வுகளை செய்தார்

பின் கடும் உழைப்பு பெரும் தோல்விக்கு பின் மின் விளக்கினை கண்டுபிடித்தார், மானிட குலத்திற்கு அவர் காட்டிய மாபெரும் ஒளி அது

நியூயார்க் நகரம் இரவில் விளக்கு பெற்றதும் அது உலக நாடுகளுக்கு அதிசயமாக விளங்கி வழிகாட்டியதும் எடிசன் என்பவராலே

இருட்டில் இருந்த உலகம் எடிசனால் இன்று இரவு நாம் காணும் வர்ண ஜாலத்திற்கு மாறியது

எப்படியப்பா இப்படி எல்லாம் மனிதனால் முடிகின்றது என உலகம் வியக்கும் பொழுது மின்மோட்டாரை உருவாக்கினார் எடிசன்

ஆம் இன்று பம்புசெட், கார் முதல் வீட்டு பேன், தொழிற்சாலை வரை இயங்கும் மோட்டார் உலகிது, அது அன்றி அமையாது தொழில் உலகு

அதுதான் இன்றைய கிரைண்டர், மிக்ஸிக்கும் அடிப்படை அவை இன்றி இன்றைய சமையல் கூடங்களும் இல்லை, அதற்கு அடிப்படை கொடுத்தது எடிசன்

அதன் பின்னும் மனிதர் சும்மா இருந்தாரா? இன்றைய சிடி, டிவிடி வகையாறாகளுக்கு முன்னோடியான கருவியினை கண்டுபிடித்தார்

அதாவது ஒலியினை பதிவு செய்யும் கருவி அது, பாடல்கள் இப்படித்தான் முதலில் பதிவு செய்யபட்டது, மனிதன் பாடியதை எந்திரம் திருப்பி பாடும் அதிசயத்தை செய்து காட்டினார் எடிசன்

ஒலியினை பதிந்து காட்டியாயிற்று இதை போல ஒளிபடங்களை உருவாக்கினால் என்ன எனும் அவரின் சிந்தனையில் உதித்ததுதான் திரைப்பட படபிடிப்பு கருவி

ஆம் அவரின் அந்த கண்டுபிடிப்புதான் சினிமா எனும் உலகினை தொடங்கி வைத்தது, உலகில் பெரும் மாற்றத்தை அது கொடுத்தது

இந்த மானிட வாழ்விற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த விஞ்ஞானி எனும் வகையில் எடிசன் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டார்

இன்று காணும் ஒளிவிளக்கு, தகவல் தொடர்பு, பிரிண்டர், சிடி, டிவிடி, சினிமா கேமரா என பல விஷயங்களை தொடங்கி வைத்தவர் எடிசன் என்பவரே.

நாம் அனுபவிக்கும் இந்த விஞ்ஞான வசதிகளுக்கெல்லாம் காரணம் அவரே, மறுக்க மறைக்க முடியாது

இரவில் விளக்கிற்கு சுவிட்சை தட்டும்பொழுதும், பேனை ஓடவிடும்பொழுதும், மோட்டாரில் நீர் கொட்டும்பொழுதும், இன்னும் பல விஷயங்களில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

கிட்டதட்ட 1400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கி இருந்தார், வாங்காமல் விட்டவை இன்னும் ஏராளம்

எப்படி அம்மனிதனால் இப்படி சாதிக்க முடிந்ததென்றால், அவனின் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருந்தது

மக்களின் வசதிக்காக, அவர்களின் வாழ்க்கை முறையினை எளிதாக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான், இறைவன் அவனுக்கு அந்த அளவு ஞானத்தையும் கொடுத்தான்

இந்த உலகமே எடிசனால் மாறிப்போனது சந்தேகமில்லை

மற்றவர்களுக்காகவே தன் வாழ்வினை செலவழித்து பெரும் விஷயங்களை கொடுத்த எடிசனின் ஜெனரல் எலக்ட்ரிக்கல்ஸ் (GE) நிறுவனம் இன்றும் உலகில் நம்பர் 1 நிறுவனமாக தன் கடமையினை செய்து கொண்டே இருக்கின்றது

புது புது எந்திரமும் பல விஷயங்களும் அந்நிறுவனத்தால் உருவாக்கபட்டு கொண்டே இருக்கின்றது

எடிசன் அதில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார், மற்றவர்களுக்காக வாழ நினைப்பவனுக்கு, அவர்கள் சிரமத்தை தன் கண்டுபிடிப்பு மூலம் சரிசெய்ய வாழ்வினை கொடுத்தவனுக்கு ஒரு நாளும் அழிவில்லை என்பதே எடிசன் வாழ்வு சொல்லும் தத்துவம்

அவர் இறந்தது அக்டோபர் 18 எனினும் அவரின் உடல் அடக்கம் செய்யபட்டது அக்டோபர் 21

அன்று முதல் இன்றுவரை அமெரிக்காவில் அக்டோபர் 21ல் நள்ளிரவில் எல்லா விளக்கையும் சில நிமிடம் அணைப்பார்கள்

ஆம் , எடிசன் விளக்கினை கண்டுபிடிக்காவிட்டால் உலகம் இப்படித்தான் இருக்கும் என மக்களுக்கு சொல்வார்கள், மக்களும் நன்றியோடு நினைத்து கொள்வார்கள்

அந்த மாமனிதனை நாம் நினைவு கூர்வோம், அந்த விஞ்ஞான பிதாமகனுக்கு இருட்டை விரட்டிய ஒளிநாயகனுக்கு ஆழ்ந்த நன்றியும் அஞ்சலிகளும்

மானிட இனம்  தாமஸ் ஆல்வா எடிசனுக்கு தன் மிக நன்றிகளை தெரிவித்து கொண்டு அவருக்கு உலகெங்கும் அஞ்சலி செலுத்துகின்றது .

Sunday, 21 August 2022

தன்னம்பிக்கை கதைகள்-6





ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு 
வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர். 

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு..., 

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். 

வந்தவர், "நானும் இரவு இங்கே தங்கலாமா" என்று கேட்டார்...!

அதற்கென்ன..? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? 

என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார், 

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். 

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர், 

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள், 

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக் கொள்ள முடியும்? 
என்றார்.

மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார். 

(தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை, 

ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். 

இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! 

நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். 

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது. 

மூன்றாவதாய் வந்தவர், கிளம்பும்போது,

 உங்கள் உதவிக்கு மிக்க நன்றி, 
 
என்று சொல்லி 

*எட்டு தங்க நாணயங்களை கொடுத்து*, 

நீங்கள் உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள், 

என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவர், 

அந்த காசுகளை சமமாகப் பிரித்து, 

ஆளுக்கு நான்காய் எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை, 

என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும், 
நான் பங்கிட சம்மதித்தேன்…!!

*நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது...!!*

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது, 
என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்..!

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது. 

அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை...!

*நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்...!* 

*மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை...!*

*வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது*

*மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து*, 

*தீர்ப்பும், விளக்கமும் தந்தார் கடவுள்*

*சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..!*

*அடுத்த நாள் சபை கூடியது மன்னர் இருவரையும் அழைத்தார்...!!*

*மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்*, 

*ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்*.

*ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்.*

*அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொண்டார்" என்றார்*

*அரசர் சொன்னார். நீ உன்னிடம் இருந்த மூன்று ரொட்டிகளை ஒன்பது ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தாய்*. 

*அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது*. 

*அவன் கையில் இருந்த ஐந்து ரொட்டிகளை பதினைந்து ரொட்டித் துண்டுகளாக்கி கொடுத்தான்*. 

*அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது*. 

*ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி*. 

*அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்*. 

*ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்*..

*ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்*…

*நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...!*

*எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு*. 

*இது கடவுளின் ஏட்டுக் கணக்கு இல்லை*...

*நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்*
*முழுமையாக தன்னை உண்மையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்*

POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...