Sunday, 16 October 2022

தேன் சிட்டு இதழ்-01


கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும்..
கதைகள்,கட்டுரைகள், பாடல்கள், வரைந்து பார்க்க,செய்து பார்க்க,என பல்வேறு அனுபவங்களை அளிக்க பறந்து வந்துள்ளது இந்த தேன்சிட்டு இதழ்.
 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் துணைபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதோ நம் தேன்சிட்டு இதழ்.. Download here.


தன்னம்பிக்கை கதைகள்-4

                     "கழுதையுடன் வாக்குவாதம் செய்யாதே"




கழுதையொன்று புலியிடம், "புல்லின் நிறம் நீலம்!"  என்று கூறியது.

புலி கோபமடைந்து,"இல்லை, புல் பச்சை!"  என்று கூறியது.

விவாதம் சூடுபிடித்தது, 

இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்க முடிவு செய்தனர், 

எனவே அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தின் முன் சென்றனர்.

சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட கழுதை, 

"அரசே, புல் நீலநிறமானது என்பது உண்மையா?"  என்று கேட்டது.

சிங்கம், "உண்மை, புல் நீலநிறமானது" என்று பதிலளித்தது.  

கழுதை விரைந்து தொடர்ந்தது, 

"புலி என்னுடன் உடன்படவில்லை••• முரண்படுகிறது•• அரசே•••!
என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டியுங்கள்."  என்று கூறியது.

அப்போது அரசர், "புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு யாருடனும்  பேசக்கூடாது, மௌனமாகவே இருக்க வேண்டும்••• 
இதுதான் உனக்குரிய தண்டனை" என்று அறிவித்தது.

 கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, 

"புல் நீலநிறமானது!"  , "புல் நீலநிறமானது!"  

என்று கூறிக்கொண்டு அங்கிருந்து அகன்றது. 

புலி அதனது தண்டனையை ஏற்றுக்கொண்டது, 

ஆனால் அது சிங்கத்திடம் 

"அரசே, ஏன் என்னைத் தண்டித்தீர்கள்? 
புல் பச்சை நிறம்தானே."  என்றது.

சிங்கம்:   "நீ சொல்வது சரிதான் - புல் பச்சைநிறம்தான்."  

புலி:    "அப்படியானால் ஏன் 
என்னைத் தண்டித்தீர்கள்?".

 சிங்கம் பதிலளித்தது,

 "புல் நீலமா அல்லது பச்சை நிறமா என்ற கேள்விக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான 
ஓர் உயிரினம் ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கினாய்? 
அதுவே எனக்கு கவலையை உண்டாக்கியது. அதற்கே இந்தத் தண்டனை!”

முட்டாள் மற்றும் வெறியருடன் வாதிடுவதுதான் மிக மோசமான நேர விரயமாகும். 

அவர்கள் உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள், 

ஆனால் அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களது பேச்சு வாதங்களில் வெற்றி மட்டுமே.  

அர்த்தமில்லாத வாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள் ... 

நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை வழங்கினாலும் அவர்கள் புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்கள். 

அவர்களின் அகங்காரத்தாலும், வெறுப்பு மற்றும் கோபத்தாலும் கண்மூடித்தனமாகத்தான் இருப்பார்கள்.  

அவர்கள் பிழையாக இருந்தாலும் அவர்களுக்கு தம்மை சரியாக இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும்.

அறியாமை அலறும் போது, ​​நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும்.  

"உங்கள் அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை."
                                                         நன்றி.

Friday, 14 October 2022

புது ஊஞ்சல் இதழ்-01

குழந்தைகளிடையே வாசிப்புப்
பழக்கத்தை  ஏற்படுத்தித் தரும்
எந்தப் புத்தகமும்
சிறந்த புத்தகமே...!
 அந்த வகையில் தமிழக அரசின் புதிய முயற்சியாக வெளிவந்துள்ள மூன்று இதழ்கள்.. மாணவர்களின் வாசிப்புத்திறனை மையப்படுத்தி வெளிவந்துள்ள இந்த இதழ்கள் நிச்சயம் அதன் நோக்கத்தை வென்றெடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இதற்காக உழைத்துள்ள அத்துனை நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..

3-5 ம் வகுப்பு மாணவர்களுக்கானது.
 இதழ் -01 புது ஊஞ்சல் 



தன்னம்பிக்கை கதைகள்-3

                                              

                                                   கண்ணால் காண்பது பொய்


ஒரு செல்வந்த முதலாளியின் வீட்டில் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். 

முதலாளி தினமும் வீட்டுக்கு வரும் போது ஓடோடிச் சென்று வீதிக்கதவை திறந்து அவருக்கு வணக்கம் சொல்வது அவனது வழக்கம். 

ஆனாலும் ஒரு நாளேனும் அந்த முதலாளி பதில் கூறியதும் கிடையாது; 

காவலாளி முகத்தை ஏறெடுத்து பார்ப்பதும் கிடையாது.

ஒரு நாள் பசியோடிருந்த அந்தக் காவலாளி வீட்டுக்கு வெளியே உள்ள குப்பத்தொட்டியில் வீசப்பட்ட உணவுகள் ஏதும் இருந்தால் எடுத்து சாப்பிடுவோம் என குப்பத்தொட்டியை கிளறும் போது முதலாளி அதனைக் கண்டார். 

ஆனாலும் வழக்கம் போல எதையுமே கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது. 

காவலாளி சந்தோஷத்தில் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் பார்க்காமல் எடுத்துச் சென்றான்.

இவ்வாறே தினமும் அதே இடத்தில் ஒரு பையிருக்கும், அந்த பை நிறைய உணவுப்பொருட்கள் இருக்கும். 

அவனும் அதை தவறாமல் எடுத்து தன் மனைவி, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தான்.

 இருந்தாலும் எந்த முட்டாள் இப்படி தினமும் பொருட்களை வாங்கி இங்கே விட்டுச் செல்கிறான் என மனதுக்குள் ஒரு நகைப்புடன் கூடிய கேள்வியும் வேற.

திடிரென ஒரு நாள் முதலாளி இறந்துவிட்டார். 

வீடு நிறைய முதலாளியின் உறவினர்களும், நண்பர்களும் வந்தனர். 

அன்று அதே இடத்தில் உணவுப்பொதியை தேடினான். 

உணவு இருக்கவில்லை. ஒரு வேளை பார்க்க வந்தவர் யாரேனும் எடுத்திருக்க முடியும் என நினைத்து விட்டுவிட்டான். 

இரண்டாம் நாள் பார்க்கிறான், அந்த இடத்தில் உணவுப்பை இல்லை; 

மூன்றாம் நாள், நான்காம் நாள் என பார்க்கிறான். உணவுப்பை இருக்கவில்லை.

இப்படியே சென்றதால் அந்தக் காவலாளிக்கு தன் குடும்பத்துக்கு உணவளிக்க பெரும் சிரமமாய் போயிற்று. 

உடனே தனது முதலாளியம்மாவிடம் போய் சம்பளத்தை உயர்த்தவும் இல்லையாயின் வேலையை விட்டு விடுவதாகவும் கூறினான். 

அதற்கு முதலாளியம்மா மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் வீதியோரம் எடுக்கும் உணவுப்பை கதையையும், அது இல்லாததால் தன் குடும்பம் படும் அவஸ்தையையும் சொன்னான். 

உடனே முதலாளியம்மா கேட்டார்; 

எப்போதிலிருந்து உணவுப் பை இல்லாமல் போனதென்று. 

அதற்கு அவனும் முதலாளி இறந்த நாளிலிருந்து என சொன்னதும், 

முதலாளியம்மா ‘ஓ’ என அழத்தொடங்கினார். 

இதனைப் பார்த்து கவலையடைந்த காவலாளி சம்பள உயர்வு வேண்டாம், 

நான் இங்கேயே வேலை செய்கிறேன், அழுவதை நிறுத்துங்கள் என கூறினான்..

அதற்கு முதலாளியம்மா, நான் அதற்கு அழவில்லை.

 என் கணவர் தினமும் ஏழு பேருக்கு உணவளித்து வந்தார். 

அதில் ஆறு பேரை ஏற்கனவே இனம் கண்டுவிட்டேன். 

ஏழாம் நபரைத்தான் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தேன். 

ஏழாவது நபர் நீதான் என தெரிந்து கொண்டதும் சந்தோஷத்தில் அழுகிறேன் என்றாள்.

நான் தினமும் தவறாமல் வணக்கம் சொல்லியும் ஏறெடுத்தும் கூட பார்க்காத நம்ம முதலாளியா இப்படி நமக்கு உணவு தந்தார் என நம்பியும் நம்பாமலும் யோசித்தபடியே அவன் சென்றான்.

அடுத்த நாளிலிருந்து முதலாளியின் மகன் தினமும் காவலாளியின் வீடு தேடி வந்து உணவுப்பையை காவலாளியின் கையிலே கொடுத்துச் சென்றான். 

காவலாளி நன்றி சொல்லியும் முதலாளி மகன் அதற்கு பதில் சொல்லாமலே செல்வான், அவனது தந்தையைப் போல.

ஒரு நாள் இப்படித்தான் முதலாளியின் மகன் வீடு தேடிவந்து கையில் உணவுப்பையை கொடுக்கும் போது வழக்கம் போல நன்றி சொன்னான் காவலாளி. 

அதற்கு அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

பொறுமையை இழந்த காவலாளி மிகவும் உரத்த குரலில் நன்றி சொன்னான். 

திரும்பிப்பார்த்த அந்த சிறுவன் “எனக்கும் என் தந்தையைப் போல் காது இரண்டும் கேட்காது” என்று சொல்லிவிட்டு திரும்பிப் போனான்.
 
இந்தக் கதையிலிருந்து இரண்டு விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்;

01. எதையும், யாரையும் பார்த்த மாத்திரத்திலே நம்பி முடிவெடுக்கக் கூடாது.

02. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்...!!!

Wednesday, 12 October 2022

தனனம்பிக்கை கதைகள்-2 (எடிசன்)

                                          உலகை மாற்றிய எடிசன்


இந்த உலகில் எத்தனையோ விஞ்ஞானிகள் வந்தாலும் எடிசனுக்கு தனி இடம் உண்டு, அவனின் அறிவும் சிந்தனையும் அதைவிட முக்கியமாய் மானிடம் பயனுற ஏதாவது செய்தாக வேண்டும் எனும் பெரும் விருப்பமும் அவரிடம் இருந்தது.

அவர் அளவு சோதனையினை சந்தித்தவனுமில்லை, அவர் அளவு சாதித்தவருமில்லை. அப்படிபட்ட வாழ்வு அவருடையது

சிறுவயதில் நோயாளி, பள்ளி செல்லவே 8 வயது ஆனது. அங்கு சென்றாலும் காது கேட்காது, கூடவே படிப்பில் மந்தம் ஆனால் ஏகபட்ட கேள்விகள் எழுப்பினார், பூராவும் படிப்பிற்கு சம்பந்தமில்லா விஷயம்

ஆசிரியர் இவன் மூளை கோளாறு பிடித்தவன் என கழுத்தை பிடித்து தள்ள, எடிசனின் அம்மா ஆசிரியர் ஆனார், அவருக்கு வாசிக்க கற்றுகொடுத்தார், அப்பா மரவியாபாரி கணக்கு பார்க்க கற்றுகொடுத்தார் இவ்வளவுதான் படிப்பு.

அவர் வாசித்ததெல்லாம் நியூட்டனும், பாரடேயும்.

ஆயினும் பிழைக்க வேண்டுமே ரயில் நினையத்தில் தந்தி அடிக்கும் வேலைக்கு சென்றார், அங்கும் ஆய்வு செய்கின்றேன் என எதனையோ அமிலத்தை கொட்டிவிட அந்த வேலையும் போனது

பின் அதேரயில் நிலையத்தில் நொறுக்கு தீனி விற்றார்

அதன் பின் காய்கறி விற்றார், பன்றி வெட்டினார், சலூன் கூட நடத்தினார் என்கின்றார்கள். அந்த எடிசன் பிற்காலத்தில் உலகை மாற்றுவான் என யாரும் நம்பி இருக்கமாட்டார்கள்.

படிப்பு இல்லா முட்டாள், கற்பனையில் சுற்றும் அரைகிறுக்கன் எனும் ஒரு பெயரோடுதான் அவர் வலம் வந்தார்

பல வேலைகளை செய்த எடிசன் பின்பு பங்கு சந்தை அலுவலகத்தில் வந்தபொழுதுதான் அவர் வாழ்க்கை மாறியது, பங்கு தகவல்களை அனுப்பும் தந்தி முறையில் வேலைக்கு சேர்ந்தார்

ஏன் என்றால் காது கேட்காதவன் நிலைக்கு அதுதான் சரி, தந்தி புள்ளிகளாக வரும், கோடுகளாக வரும் அதை வைத்து சிலவற்றை எழுத வேண்டும், இதற்கு காது கேட்கும் அவசியமில்லை

அவரின் பலவீனமே அவருக்கு பலமாயிற்று, செவிடன் என்பதால்  அப்பணி எளிதாக கிடைத்தது, அதில் இருந்த எடிசன் அதன் சிக்கல்களை கண்டு எளிதாக்க எண்ணிணான்

எடிசன் எனும் விஞ்ஞானி இங்குதான் உருவானான், கோடுகளாக வரும் தந்தியினை அதுவரை மனிதன் மொழிபெயர்க்க வேண்டும், எடிசன் அந்த கோடுகளை எந்திரமே எழுதினால் என்ன என யோசித்தார், அதை செயல்படுத்த முனைந்தார்

அதுவரை ஒற்றை வழியாக இருந்த தந்திமுறையினை இருவழியாக்கினார், ஒற்றை வழி என்றால் தந்தி அனுப்பவும் திரும்ப பெறவும் ஒரே வழிதான் கிட்டதட்ட ஒன்வே. ஆனால் இருவழி சாலை அமைத்தது போல வழிசெய்தார் எடிசன்

இந்த ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு உருவாக்கியதுதான் கிராம்போன் எனும் கருவி, இன்றைய நவீன கருவிகளுக்கும் தொலைதொடர்பு சாதனங்களுக்கும் முன்னோடி

ஆய்வு என்பது அபின் போன்றது, மிகபெரும் போதை அது உள்ளே இழுத்துவிட்டால் விடாது, எடிசனும் தொடர்ந்து கருவிகளை உருவாக்கி கொண்டே இருந்தார்

அதில் மாபெரும் வெற்றிதான் மின்விளக்கு, பாரடேயினை விரும்பி வாசித்த எடிசன் அந்த மின்சக்தியினை ஓளியாக மாற்றலாம் என நம்பினார், கடும் ஆய்வுகளை செய்தார்

பின் கடும் உழைப்பு பெரும் தோல்விக்கு பின் மின் விளக்கினை கண்டுபிடித்தார், மானிட குலத்திற்கு அவர் காட்டிய மாபெரும் ஒளி அது

நியூயார்க் நகரம் இரவில் விளக்கு பெற்றதும் அது உலக நாடுகளுக்கு அதிசயமாக விளங்கி வழிகாட்டியதும் எடிசன் என்பவராலே

இருட்டில் இருந்த உலகம் எடிசனால் இன்று இரவு நாம் காணும் வர்ண ஜாலத்திற்கு மாறியது

எப்படியப்பா இப்படி எல்லாம் மனிதனால் முடிகின்றது என உலகம் வியக்கும் பொழுது மின்மோட்டாரை உருவாக்கினார் எடிசன்

ஆம் இன்று பம்புசெட், கார் முதல் வீட்டு பேன், தொழிற்சாலை வரை இயங்கும் மோட்டார் உலகிது, அது அன்றி அமையாது தொழில் உலகு

அதுதான் இன்றைய கிரைண்டர், மிக்ஸிக்கும் அடிப்படை அவை இன்றி இன்றைய சமையல் கூடங்களும் இல்லை, அதற்கு அடிப்படை கொடுத்தது எடிசன்

அதன் பின்னும் மனிதர் சும்மா இருந்தாரா? இன்றைய சிடி, டிவிடி வகையாறாகளுக்கு முன்னோடியான கருவியினை கண்டுபிடித்தார்

அதாவது ஒலியினை பதிவு செய்யும் கருவி அது, பாடல்கள் இப்படித்தான் முதலில் பதிவு செய்யபட்டது, மனிதன் பாடியதை எந்திரம் திருப்பி பாடும் அதிசயத்தை செய்து காட்டினார் எடிசன்

ஒலியினை பதிந்து காட்டியாயிற்று இதை போல ஒளிபடங்களை உருவாக்கினால் என்ன எனும் அவரின் சிந்தனையில் உதித்ததுதான் திரைப்பட படபிடிப்பு கருவி

ஆம் அவரின் அந்த கண்டுபிடிப்புதான் சினிமா எனும் உலகினை தொடங்கி வைத்தது, உலகில் பெரும் மாற்றத்தை அது கொடுத்தது

இந்த மானிட வாழ்விற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்த விஞ்ஞானி எனும் வகையில் எடிசன் வரலாற்றில் நிலைபெற்றுவிட்டார்

இன்று காணும் ஒளிவிளக்கு, தகவல் தொடர்பு, பிரிண்டர், சிடி, டிவிடி, சினிமா கேமரா என பல விஷயங்களை தொடங்கி வைத்தவர் எடிசன் என்பவரே.

நாம் அனுபவிக்கும் இந்த விஞ்ஞான வசதிகளுக்கெல்லாம் காரணம் அவரே, மறுக்க மறைக்க முடியாது

இரவில் விளக்கிற்கு சுவிட்சை தட்டும்பொழுதும், பேனை ஓடவிடும்பொழுதும், மோட்டாரில் நீர் கொட்டும்பொழுதும், இன்னும் பல விஷயங்களில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

கிட்டதட்ட 1400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கி இருந்தார், வாங்காமல் விட்டவை இன்னும் ஏராளம்

எப்படி அம்மனிதனால் இப்படி சாதிக்க முடிந்ததென்றால், அவனின் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருந்தது

மக்களின் வசதிக்காக, அவர்களின் வாழ்க்கை முறையினை எளிதாக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான், இறைவன் அவனுக்கு அந்த அளவு ஞானத்தையும் கொடுத்தான்

இந்த உலகமே எடிசனால் மாறிப்போனது சந்தேகமில்லை

மற்றவர்களுக்காகவே தன் வாழ்வினை செலவழித்து பெரும் விஷயங்களை கொடுத்த எடிசனின் ஜெனரல் எலக்ட்ரிக்கல்ஸ் (GE) நிறுவனம் இன்றும் உலகில் நம்பர் 1 நிறுவனமாக தன் கடமையினை செய்து கொண்டே இருக்கின்றது

புது புது எந்திரமும் பல விஷயங்களும் அந்நிறுவனத்தால் உருவாக்கபட்டு கொண்டே இருக்கின்றது

எடிசன் அதில் வாழ்ந்துகொண்டே இருக்கின்றார், மற்றவர்களுக்காக வாழ நினைப்பவனுக்கு, அவர்கள் சிரமத்தை தன் கண்டுபிடிப்பு மூலம் சரிசெய்ய வாழ்வினை கொடுத்தவனுக்கு ஒரு நாளும் அழிவில்லை என்பதே எடிசன் வாழ்வு சொல்லும் தத்துவம்

அவர் இறந்தது அக்டோபர் 18 எனினும் அவரின் உடல் அடக்கம் செய்யபட்டது அக்டோபர் 21

அன்று முதல் இன்றுவரை அமெரிக்காவில் அக்டோபர் 21ல் நள்ளிரவில் எல்லா விளக்கையும் சில நிமிடம் அணைப்பார்கள்

ஆம் , எடிசன் விளக்கினை கண்டுபிடிக்காவிட்டால் உலகம் இப்படித்தான் இருக்கும் என மக்களுக்கு சொல்வார்கள், மக்களும் நன்றியோடு நினைத்து கொள்வார்கள்

அந்த மாமனிதனை நாம் நினைவு கூர்வோம், அந்த விஞ்ஞான பிதாமகனுக்கு இருட்டை விரட்டிய ஒளிநாயகனுக்கு ஆழ்ந்த நன்றியும் அஞ்சலிகளும்

மானிட இனம்  தாமஸ் ஆல்வா எடிசனுக்கு தன் மிக நன்றிகளை தெரிவித்து கொண்டு அவருக்கு உலகெங்கும் அஞ்சலி செலுத்துகின்றது .

Monday, 10 October 2022

தன்னம்பிக்கை கதைகள்-1

                                           தன்னம்பிக்கையின் சக்தி


வெகு நாட்கள் முன்பு பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவை, 
பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும்,
பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது. தங்குவதற்கு ஒரு கூடு கூட
இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.


ஒரு நாள் ஒரு  ஞானி  அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம்,
"எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை 
சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என்
துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம்  கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை 
கேட்டது.

"கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறிச் சென்றார்.

தன் குருவை  அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக்
கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். "இன்னும் ஏழு
பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். அதுவரை
அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை" என்று குரு பதில் கூறினார்.

இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய்
விடுமே என்றெண்ணிய ஞானி  "இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா" என்று குருவை
பணிந்து வேண்டினார்.

குருவும் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நன்மை
விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார்.  அனைத்தும் நன்மைக்கே 
அனைத்திற்கும் நன்றி என்பதுவே அந்த மாமந்திரம்.

குரு கற்பித்த மந்திரத்தை ஞானியும்  அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு
நாட்களுக்குப் பின் அந்த ஞானி அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை
மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார்.

அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன. அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி
முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன்
அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.

குருவிற்கு  மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென குரு 
கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் குருவை பார்க்கச்
சென்றார்.

குருவிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: "ஆம். ஏழு
பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது
உண்மைதான். ஆனால் அனைத்தும் நன்மைக்கே,  அனைத்திற்கும் நன்றி என்ற மந்திரத்தை
அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி கூறியதால்  நிலைமை மாறியது.

பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது.

வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.

*சூழல் எதுவாயினும் நம்பிக்கையுடன் சொன்னது*.

எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது" என்று 
பதில் கூறினார்.

ஞானியும் தன் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை
ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.

ஞானி அந்த மாமந்திரத்தை தன் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பித்தார்  சந்திக்கும்
எல்லா சூழல்களிலும்.
*அனைத்தும் நன்மைக்கே,* *அனைத்திற்கும் நன்றி*
என்று உளமார கூற ஆரம்பித்தார்.

அதுவரை அவர்  பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.

அதை போல் நாமும்  உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு,
வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் .... என அனைத்திலும்,
எல்லா  சூழ்நிலைகளிலும், நடப்பவை  அனைத்தும் நன்மைக்கே, எனவே 

நன்றி! நன்றி!என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறுங்கள்.
இந்த எளிமையான மாமந்திரம்  வாழ்வில் மாபெரும் மாற்றங்களை கொண்டு வரும்.

தன்னம்பிக்கை  எவ்வளவு சக்தி மிக்கது.
தன்னபிக்கை  ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின்
பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.


 அடுத்த பதிவில் மீண்டும் ஒரு தன்னம்பிக்கையூட்டும் கதையுடன் சந்திக்கலாம் நன்றி வணக்கம்

Sunday, 4 September 2022

நேரிய இணைக்கோணங்கள் 180° MATHS CLUB ACTIVITY -2

 

 நேர்கோட்டின் மீது அமையும் அடுத்துள்ள கோண இணைகள் நேரிய கோண இணைகள் எனப்படும்

ஒரு நேரிய கோணத்தின் மற்றொரு இணையை கண்டறிய மாணவர்களுக்கு இந்த இலை செயல்பாடு பயன்படுகிறது. முதலில் இலைகளிலுள்ள நேரிய கோணங்கள் பற்றி மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட செயல்பாடு மாணவர்களால் செய்யப்பட்டது .
























இதன்மூலம் நேரிய கோண இணைகள் பற்றி தெளிவாக மாணவர்கள் அறிய முடிந்தது.


மீண்டும் ஓர் அழகிய கணித பதிவில் மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.


POPULAR POSTS

8th Standard Maths Unit 2: அளவைகள் (Measurements) — Full Study Notes, Formula Cheat Sheet & Online Quiz | TNTET, TNPSC & NMMS Special Guide

MATHS & MATHS ONLY 🌐 www.mathsandmathsonly.com 8-ஆம் வகுப்பு கணிதம் | அலகு 2: அளவைகள் (Measurements) — முழுமையா...